Tuesday, December 1, 2020

துணி மற்றும் கந்தல் துணி = கண்ணதாசன்


கரிசல் காட்டுக் கழனியில் சில

கால்கள் உழுத உழவு –சில

கைகள் கனிந்த கனிவு –குடிசை

எரிக்கும் விளக்கின் ஒளியைப் போல

இலைகள் இரண்டு வரவு-அதில்

இயற்கை கலந்த அழகு

பருத்தி என்றொரு செடி வளர்ந்தது

பருவப் பெண்ணைப் போலே –அந்தக்

கரிசல் கழனிமேலே –அது

சிரித்த அழகில் காய் வெடித்தது

சின்னக் குழந்தை போலே –அந்த

வண்ணச் செடியின் மேலே!

..........  ........... ..........

சலவை செய்து வாசம் போட்டுத்

தங்கம் போல எடுத்து-பின்

அங்கம் பொலிய உடுத்து-தன்

நிலைமை மாறிக் கிழிந்த பின்பு

நிலத்தில் என்னை விடுத்து-சென்றார்

நீண்ட கதை முடித்து

சுட்ட சோற்றுப் பானை சட்டி

தூக்கி இறக்க வந்தேன்-என்

தூய உடலைத் தந்தேன்-நிலை

கெட்டுப் போன செல்வர் போலக்

கேள்வியின்றி நின்றேன் –இன்று

கேலி வாழ்க்கை கண்டேன்


Monday, November 23, 2020

மாநில பொது சுகாதார நூலகம்





 

         கணினிகளின் பயன்பாடு பெருகிவிட்ட நிலையில் வாசிப்பு பழக்கம் குறைந்து வருவதாக சொல்வதையும் நாம் புறக்கணிக்க முடியாது.  நூல்களை படிப்பதன் முக்கியத்துவம் கம்ப்யூட்டரில் படிப்பதினால் எவ்வகையிலும் குறைந்து போகாது. எனவே, இணையவழி சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டு படிக்கும் பழக்கத்தை உயர்த்தும் நோக்கிலேயே  நமது பொது சுகாதார நூலகமும் செயல்படுகிறது.

             தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் மாநில பொது சுகாதார நூலகம் தனியொரு கட்டிடத்தில் முதல் தளத்தில் அமைந்துள்ளது. மாநில பொது சுகாதார நூலகம் ஒரு நூலகர், ஒரு நூலக உதவியாளர், அலுவலக உதவியாளர் ஆகிய மூன்று பணியாளர்களைக் கொண்டு செயல்படும் ஒரு சிறப்பு வகை நூலகம்.  இது பொது சுகாதாரம் சார்ந்த பெரும்பான்மையான நூல்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த நூல்கள் மற்றும் தரவுகளை சேகரித்து பயனாளிகளுக்கு அளிக்கும்  மையமாசெயல்படுகிறது.

நூலக குழு

                 மாநில பொது சுகாதார நூலக குழு அமைக்கப்பட்டு உறுப்பினர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறது. இயக்குநர் தலைவராகவும், இயக்குநர் சிறப்புபணி (M&F) இணை தலைவராகவும், இணை இயக்குநர் (கொள்ளை நோய்) மற்றும் நிதி ஆலோசகர் மற்றும் முதன்மை கணக்கு அலுவலர் ஆகியோரை குழு உறுப்பினர்களாகவும், இணை இயக்குநர் (சுகநி) குழு அமைப்பாளராகவும்,  நூலகர் குழு செயலராகவும்  கொண்டு செயல்படுகிறது.

நூலக பயனாளர்கள் வசதிகள்

         நூலக பயனாளர்களுக்கு எளிதில் நூலகம் வந்து செல்ல மின் தூக்கு வசதிகள் (Lift) செய்யப்பட்டுள்ளது.  மேலும் குளிர்சாதன வசதிகள், தனி வகை நாற்காலிகள், தனியாக வல்லுனர்களின் சிறப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்ள  கருத்தரங்க கூடமும், கணினிகள் மற்றும் அளவில்லா இணையதள வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  அரிய தகவல்களை பிரதி எடுத்துக்கொள்ள நகலக வசதியும் உள்ளது.  வாசகருடைய நேரத்தைச் சேமிக்க வேண்டும் என்ற நோக்கில் நூலகவியலின் தந்தை டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களின் நூலகவிதி 4-ன்படி எளிய முறையில் நூல்களை தேர்வு செய்ய கணினி வழியாக செயல்படும் தனிவகை மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

        இந்நூலகம் செயல்பாடுகள் முற்றிலும் கணினி மையமாக்கப்பட்டுள்ளது. நூலக பயன்பாட்டாளர்களுக்கு தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய பட்டைக் குறியீட்டு முறையில் (Barcode) புத்தகங்களை தெரிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்த நூல்களை தாங்களாகவே நூல் எண் மற்றம் நூல் அடுக்கு எண்களை பயன்படுத்தி எளிதில் எடுத்து பயன்படுத்தும் வகையில் செம்மையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.   இயக்குநர் அலுவலக அலுவலர்கள் மற்றும் மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள், இந்நூலகத்தின் பெரும்பான்மையான பயனாளர்கள் ஆவர்.

நூல்கள்

                 நூலகத்தில் 9844 மருத்துவம் சார்ந்த புத்தகங்கள், 409 பல்வகை நூல்கள், 210 மென் தட்டு வடிவிலான புத்தங்கள் மற்றும் தகவல்கள், மேலும் பருவ இதழ்களின்பின் தொகுப்புகள் போன்றவைகள் தன்னகத்தே கொண்டது. 14 மருத்துவ பருவ இதழ்கள் தொடர்ந்து சந்தா செலுத்தி பெறப்படுகிறது. 8 ஆங்கிலம் மற்றும் தினசரி இதழ்கள் பொது பயன்பாட்டுக்கும் செய்தி சேகரிப்பிற்கும் சந்தா செலுத்தி பெறப்படுகிறது.  மேற்கண்ட 8 நாளிதழ்களுக்கும் இணையம் மூலம் படிப்பதற்கும் சந்தா செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட சுகாதார அலுவலகங்களுடன் தொடர்பு

                மாநில பொது சுகாதார நூலகம், பொது சுகாதார இயக்குநரகம் மற்றும் மாவட்ட துணை சுகாதார இயக்குநரக பணிகளுக்கிடையே தகவல் தொடர்பு பணிகளையும் செயல்படுத்துகிறது.  அதாவது மாவட்டதுணை  சுகாதார பணிகள் சம்மந்தமான எதிரிடை செய்திகளை இணையம் வழியாக சேகரித்து உடனுக்குடன் உயர் அலுவலகர்களுக்கு அனுப்பி தீர்வு காண இயலும் வகையில் மின்னஞ்சல் அனுப்பும் பூர்வாங்க பணிகளையும், மாவட்ட அளவிலான சட்டம் சார்ந்த புகார்களுக்கு தேவையான பதில் தகவல் தயாரிக்க தேவையான  ஆவணங்கள்  அளித்தல் போன்ற பணிகளையும், கட்செவி அல்லது மின்னஞ்சல் வழியாக செய்கிறது.

ஆளறி அட்டை வழங்குதல்

                  நூலகத்திற்கு  வரும் பயனாளர்களுக்கு சிறப்பான ஆளறி அட்டை வழங்கப்பட்டு அவர்களது வருகை கணினி மூலம் வருகை பதிவு செய்யப்படுகிறது.  மேலும் அதன்மூலம்  நூல் வழங்குதல் மற்றும்  பெறுதல் போன்ற பணிகள் நடைபெறுகிறது.  

நூலகத்தின் பணி

               எட்டு செய்தித்தாள்கள் மூலம் மருத்துவ செய்திகள் சேகரிக்கப்பட்டு, தினந்தோறும் இயக்குநரின் பார்வைக்கு அனுப்பி வைத்தல், மேலும் அனைத்து மாவட்ட மருத்துவ துறை சார்ந்த செய்திகளை இணையம் வழியாக செய்திதாள்கள் மற்றும் கைபேசி வழியாக குறுஞ்செய்திகள் சேகரித்து சுகாதார துறை செயலர், இயக்குநர், துறைகளின் மற்ற இயக்குநர்கள், துறை திட்ட அலுவலர்களுக்கு அனுப்பி வைத்தல் போன்ற பணிகளையும் இந்நூலகம் 2002 மேற்கொண்டு வருகிறது.